Thursday, 21 May 2020

பட்டினத்தார் - பூரண மாலை ( 7 )

பட்டினத்தார் பாடல்கள்

பூரண மாலை



வானில் கதிர்மதியாய் வளர்ந்து
   பின் ஒன்றானது போல்
ஊன் உடலுக்குள் இருந்த
   உயிர்ப்பு அறியேன்......................பூரணமே !   61

பொய்யும் புலையும் மிகப் பொருந்தி
   வீண் பேசல் அன்றி
ஐயோ உனை உறைக்க
   அறிகிலேன் ..................................பூரணமே !    62

நிரந்தரமாய் என்றும்
    நின்று விளையாடினதைப்
பரம் அதுவே என்னப்
   பதமறியேன் ...................................பூரணமே !   63

கொல்வாய்  பிறப்பிப்பாய்
   கூட இருந்தே சுகிப்பாய்
செல்வாய் பிறர்க்குள்
   செயல் அறியேன்  .........................பூரணமே !   64

வாரிதியாய் வையமெல்லாம் மன்னும்
   அண்ட பிண்டமெல்லாம்
சாரதியாய் நின்ற 
    தலமறியேன்  ................................பூரணமே !  65

வித்தாய் மரமாய்  
   வெளியாய் ஒளியாய்
நீ சத்தாயிருந்த 
   தரமறியேன்  ................................   பூரணமே !   66

தத்துவத்தைப் பார்த்து மிக
   தன்னை ஐந்தறிவால்
உய்த்து  உனைத்தான் பாராமல்
   உய்வாரோ  ...................................  பூரணமே !   67

ஒன்றாய் உயிராய்
   உடல்தோறும் நீ இருந்தும் 
என்றும் அறியார்கள் 
ஏழைகள்தாம் ..................................  பூரணமே !   68

நேற்றென்றும் நாளை என்றும் 
    நினைப்பு மறைப்பாய் படைத்து
மாற்றமாய் நின்ற 
   வளமறியேன் ...............................  பூரணமே !  69

மனம் சித்தி  சித்தம்
   மகிழ்வறிவு  ஆங்காரமதாய்
நினவாம் தலமான 
   நிலை அறியேன் ........................   பூரணமே ! 70








தொடரும் ......
   


No comments:

Post a Comment